இதுவரை சொல்லப்பட்டபடி நிலையாக அமல் செய்யவும் அதன் பலன்களை பரிபூரணமாக பெறவும் ஒரு நிபந்தனை (பத்தியம்) மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும்.

மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல்

குர்ஆன் வசனங்கள்:-
قَالَ اللهُ تَعَالي: (وَقُلْ لِّعِبَادِيْ يَقُوْلُوا الَّتِيْ هِيَ اَحْسَنُ ط اِنَّ الشَّيْطنَ يَنْزَغُ بَيْنَهُمْ ط اِنَّ الشَّيْطنَ كَانَ لِلْإِنْسَانِ عَدُوًّا مُّبِيْنًا۞).
(بني اسرائيل:٥٣)
1. (நபியே,) என்னுடைய அடியார்களுக்கு, “எது மிக அழகானதோ, அதனை அவர்கள் பேசவேண்டும்” என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கு மத்தியில் குழப்பம் செய்திடுவான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்க விரோதியாவான்”.
(பனீஇஸ்ராயீல்:53)
وَقَالَ تَعَالي: (وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ۞).
(المؤمنون:٣)
2. இன்னும் அவர்கள் வீணானவற்றைப் புறக்கணித்து இருக்கிறவர்கள்.
(அல்முஃமினூன்:3)
وَقَالَ تَعَالي: (اِذْ تَلَقَّوْنَهُ بِاَلْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَفْوَاهِكُمْ مَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَتَحْسَبُوْنَهُ هَيِّنًا ق وَهُوَ عِنْدَ اللهِ عَظِيْمٌ ۞ وَلَوْلاَ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَا يَكُوْنُ لَنَا اَنْ نَتَكَلَّمَ بِهذَا ق سُبْحنَكَ هذَا بُهْتَانٌ عَظِيْمٌ ۞ يَعِظُكُمُ اللهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهِ اَبَدًا اِنْ كُنْتُمْ مُؤْمِنِيْنَ۞).
(النور:١٧–١٥)
3. இதனை உங்களுடைய நாவுகளைக் கொண்டு நீங்கள் ஒருவருக்கொருவர் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டும், எது பற்றி உங்களுக்கு (உறுதியான) அறிவு இல்லையோ அந்த ஒன்றை உங்களுடைய வாய்களினால் நீங்கள் கூறிக் கொண்டிருந்த பொழுது, (உங்களுக்கு வேதனை ஏற்பட்டிருக்கும்); அதனை நீங்கள் இலேசாக எண்ணிக் கொண்டீர்கள் – அதுவோ அல்லாஹ்விடத்தில் (குற்றத்தால்) கடுமையானதாகும்.அதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது, “இதனை நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (அல்லாஹ்வே,) நீ மகாத் தூய்மையானவன்; இது கடுமையான அவதூறு” என்று நீங்கள் கூறியிருக்கவேண்டாமா? நீங்கள் (இறை) நம்பிக்கையாளர்களாக இருந்தால் இது போன்றதின்பால் எக்காலத்திலும் நீங்கள் மீளலாகாது என்ற அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான்.
(அந்நூர்:15-17)
وَقَالَ تَعَالي: (وَالَّذِيْنَ لاَ يَشْهَدُوْنَ الزُّوْرَ لا وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّواْ كِرَامًا۞).
(الفرقان:٧٢)
4. இன்னும் அவர்கள் எத்தகையோறென்றால் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; வீணானதின் பக்கம் அவர்கள் நடந்து சென்றால் கண்ணியமானவர்களாக (அதை விட்டும் ஒதுங்கிச்) செல்வார்கள்.
(அல்ஃபுர்கான்:72)
وَقَالَ تَعَالي: (وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ۞).
(القصص:٥٥)
5. வீணானதை அவர்கள் செவியுற்றால் அதைப் புறக்கணித்துவிடுவார்கள்.
(அல்கஸஸ்:55)
وَقَالَ تَعَالي: (يآيُّهَا الَّذِيْنَ آمَنُوْا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ م بِنَبَاٍ فَتَبَيَّنُوْآ اَنْ تُصِيْبُوْا قَوْمًا م بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلي مَا فَعَلْتُمْ نَادِمِيْنَ۞).
(الحجرات:٦)
6. நம்பிக்கையாளர்களே, தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால், (அதனை நன்கு விசாரித்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்; (ஏனேனில்–அவ்வாறு தெளிவுபடுத்திக் கொள்ளவில்லையானால்) அறியாமையினால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்துவிடுவீர்கள் – அப்போது நீங்கள் செய்தவற்றின் மீது வருத்தப்படுவோராய்விடுவீர்கள்.
(அல்ஹுஜுராத்:6)
وَقَالَ تَعَالي: (مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلاَّ لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ۞).
(ق:١٨)
7. (எழுதுவதற்கு) தயாராக இருக்கின்ற கண்காணிப்பாளர் ஒருவர் அவனிடத்தில் இருந்தே தவிர எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை.
(காஃப்:18)

ஹதீஸ்கள்:-
١– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مِنْ حُسْنِ اِسْلاَمِ الْمَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيْهِ.
رواه الترمذي وقال: هذا حديث غريب، باب حديث من حسن اسلام المرء تركه ما لا يعنيه، رقم:٢٣١٧
1. “ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது, நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- இந்த ஹதீஸின் கருத்து, தேவையற்ற விஷயங்களைப் பேசாமல் இருப்பதும் மற்றும் வீணான செயல்களைவிட்டு விலகியிருப்பதும், ஈமான் முழுமையானது என்பதற்கு அடையாளம். மேலும், மேற்கண்ட செயல்களை விட்டும் தவிர்ந்திருப்பது ஒருவரிடமுள்ள இஸ்லாத்திற்கு அழகும், பொலிவுமாகும் என்பதாம்.
٢– عَنْ سَهْلِ بْنِ سَعْدٍؓ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: مَنْ يَضْمَنْ لِيْ مَا بَيْنَ لَحْيَيْهِ وَماَ بَيْنَ رِجْلَيْهِ اَضْمَنْ لَهُ الْجَنَّةَ.
رواه البخاري، باب حفظ اللسان، رقم:٦٤٧٤
2. “எவர் தனது இரு தாடைகளுக்கும், இரு தொடைகளுக்கும் இடையே உள்ள உறுப்புகளுக்கு (நாவு, மர்மஸ்தானத்தைத் தவறாக உபயோகிக்காமலிருக்க) பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ, அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஹ்லுப்னு ஸஃத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣– عَنِ الْحَارِثِ بْنِ هِشَامٍؓ اَنَّهُ قَالَ لِرَسُوْلِ اللهِ ﷺ: اَخْبِرْنِيْ بِاَمْرٍ اَعْتَصِمُ بِهِ، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَمْلِكْ هذَا وَاَشَارَ اِلي لِسَانِهِ.
رواه الطبراني باسنادين واحدهما جيد، مجمع الزوائد:١٠/٥٣٦
3. “நான் உறுதியாக கடைப்பிடிக்கும் படியான ஒரு செயலை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், தமது நாவைக்காட்டி, “இதை உமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் ஹாரிஸிப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٤– عَنْ اَبِيْ جُحَيْفَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَيُّ اْلاَعْمَالِ اَحَبُّ اِلَي اللهِ؟ قَالَ: فَسَكَتُوْا فَلَمْ يُجِبْهُ اَحَدٌ قَالَ: هُوَ حِفْظُ اللِّسَانِ.
رواه البيهقي:٤/٢٤٥
4. “அல்லாஹுதஆலாவுக்கு மிகவும் பிரியமான அமல் எது?” என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் (ரலி) வினவியபோது, அனைவரும் மௌனமாக இருந்தனர், யாரும் பதில் கூறவில்லை, “அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான செயல் நாவைப் பாதுகாப்பது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
٥– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ يَبْلُغُ الْعَبْدُ حَقِيْقَةَ اْلاِيْمَانِ حَتَّي يَخْزُنَ مِنْ لِسَانِهِ.
رواه الطبراني في الصغير والاوسط وفيه داؤد بن هلال ذكره ابن ابي حاتم ولم يذكر فيه ضعفا وبقية رجاله رجال الصحيح غير زهير بن عباد وقد وثقه جماعة، مجمع الزوائد:١٠/٥٤٣
5. “அடியான் தனது நாவைப் பாதுகாக்காதவரை, ஈமானுடைய அந்தரங்கத்தை அடைந்துகொள்ள முடியாது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٦– عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِﷺ مَا النَّجَاةُ؟ قَالَ: اَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ، وَلْيَسَعْكَ بَيْتُكَ، وَابْكِ عَلي خَطِيْئَتِكَ.
رواه الترمذي وقال: هذا حديث حسن، باب ما جاء في حفظ اللسان، رقم:٢٤٠٦
6. ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “யாரஸூலல்லாஹ்! ஈடேற்றம் பெற வழி என்ன?” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன், “உமது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும். வீட்டில் தங்கியிரும் (வீணாக வெளியில் செல்ல வேண்டாம்). உமது பாவங்களை நினைத்து அழுது கொண்டிரும்!” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- நாவைக் கட்டுப்படுத்தி வைத்தல் என்பது, அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதாம். புறம் பேசுதல், கோள் சொல்லுதல், வீண் பேச்சுகள் பேசுதல், தேவையின்றிப் பேசுதல், ஒழுக்கமின்றி எல்லாவிதப் பேச்சும் பேசுதல், வெட்கக்கேடான பேச்சுக்களைப் பேசுதல், சண்டை சச்சரவு செய்தல், திட்டுதல், மனிதனையோ மிருகத்தையோ சபித்தல், பாட்டு மற்றும் கவிதையிலேயே எந்நேரமும் ஈடுபடுதல், கேலி செய்தல், இரகசியத்தை வெளிப்படுத்துதல், பொய் வாக்குறுதி அளித்தல், பொய்ச் சத்தியம் செய்தல், சிலேடையாகப் பேசுதல், காரணமின்றிப் பிறரைப் புகழ்தல், காரணமின்றிக் கேள்விகள் கேட்டல் போன்றவைகள்.
(இத்ஹாப்)
٧– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وَقَاهُ اللهُ شَرَّ مَا بَيْنَ لَحْيَيْهِ وَشَرَّ مَا بَيْنَ رِجْلَيْهِ دَخَلَ الْجَنَّةَ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب ما جاء في حفظ اللسان، رقم: ٢٤٠٩
7. “இரு தாடைகள், மற்றும் இரு தொடைகளுக்கும் இடையே உள்ள உறுப்புகளின் கெடுதிகளைவிட்டும் எவரை அல்லாஹுதஆலா பாதுகாத்து விட்டானோ அவர் சுவனம் செல்வார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٨– عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّؓ قَالَ: جَاءَ رَجُلٌ اِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: يَا رَسُوْلَ اللهِ ﷺ اَوْصِنِيْ، فَقَالَ: (فِيْمَا اَوْصَي بِه۞): وَاخْزُنْ لِسَانَكَ اِلاَّ مِنْ خَيْرٍ فَاِنَّكَ بِذلِكَ تَغْلِبُ الشَّيْطَانَ.
(وهو بعض الحديث) رواه ابو يعلي وفي اسناده ليث بن ابي سليم وهو مدلس (والحديث حسن كذا في الحاشية) مجمع الزوائد:٤/٣٩٢
8. “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “யாரஸூலல்லாஹ், எனக்கு ஏதேனும் அறிவுரை பகருங்கள்” என்று வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் சில அறிவுரைகள் வழங்கினார்கள், “அவைகளில் ஒன்று, நல்லவை அல்லாத காரியங்களைவிட்டும் உமது நாவை பாதுகாத்துக் கொள்ளவும், அப்படிச் செய்தால் நீர் ஷைத்தான் மீது ஆதிக்கம் செலுத்துவீர்” என ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)
٩– عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّؓ رَفَعَهُ قَالَ: اِذَا اَصْبَحَ ابْنُ آدَمَ فَاِنَّ اْلاَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُوْلُ: اِتِّقِ اللهَ فِيْنَا فَاِنَّمَا نَحْنُ بِكَ، فَاِنِ اسْتَقَمْتَ اِسْتَقَمْنَا، وَاِنِ اعْوَجَجْتَ اِعْوَجَجْنَا.
رواه الترمذي، باب ما جاء في حفظ اللسان، رقم:٢٤٠٧
9. “ஆதமுடைய மகன் காலை நேரத்தை அடைந்ததும் அவனது உடம்பின் எல்லா உறுப்புக்களும், நாவிடம், “நீ எங்களுடைய காரியத்தில் அல்லாஹுதஆலாவை அஞ்சிக்கொள்; ஏனேனில், எங்களுடைய காரியங்கள் உன்னுடன் தான் (இணைந்துள்ளன). நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம், நீ வளைந்து விட்டால், நாங்களும் வளைந்துவிடுவோம்” (பிறகு அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்) என்று மிகவும் பணிவுடன் வேண்டுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١٠– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: سُئِلَ رَسُوْلُ اللهِ ﷺ عَنْ اَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ،قَالَ: تَقْوَي اللهِ وَحُسْنُ الْخُلُقِ ، وَسُئِلَ عَنْ اَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ، قَالَ: الْفَمُ وَالْفَرْجُ.
رواه الترمذي وقال: هذا حديث صحيح غريب، باب ما جاء في حسن الخلق، رقم:٢٠٠٤
10. “மக்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைய வைக்கக் கூடிய காரியங்கள் எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “தக்வா, (அல்லாஹுதஆலாவை பயப்படுவது) மற்றும் நற்குணம்” என்று சொன்னார்கள்.”மக்களை அதிகமாக நரகத்தில் நுழைய வைக்கக் கூடிய செயல் எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, “நாவு மற்றும் மர்மஸ்தானத்தைத் தவறாக உபயோகித்தல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
١١– عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍؓ قَالَ: جَاءَ اَعْرَابِيٌّ اِلَي رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَ: يَا رَسُوْلَ اللهِﷺ عَلِّمْنِيْ عَمَلاً يُدْخِلُنِيَ الْجَنَّةَ فَذَكَرَ الْحَدِيْثَ فِيْ اَمْرِهِ اِيَّاهُ بِالْإِعْتَاقِ وَفَكِّ الرَّقَبَةِ وَالْمِنْحَةِ وَغَيْرِ ذلِكَ ثُمَّ قَالَ:فَاِنْ لَمْ تُطِقْ ذلِكَ فَكُفَّ لِسَانَكَ اِلاَّ مِنْ خَيْرٍ.
رواه البيهقي:٤ /٢٣٩
11. ஹஜ்ரத் பராஇப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கிராமவாசி (ஸஹாபி) ஒருவர் நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, “யாரஸூலல்லாஹ், என்னைச் சுவனத்தில் நுழையச் செய்யும் செயல் ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்று கேட்டார், நபி (ஸல்) அவர்கள் சில அமல்களைக் கூறினார்கள். அவற்றில், அடிமையை உரிமை விடுதல், கடனாளியைக் கடன் சுமையிலிருந்து விடுவித்தல், உங்களுடைய ஆடு, மாடு, ஒட்டகத்தின் பாலில் இருந்து பலனடைய மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து உதவுதல்” என்பவையும் அடங்கும். இதைத் தவிர மேலும் சில காரியங்களையும் கூறினார்கள். அதன் பிறகு, “இவைகளைச் செய்ய உமக்கு இயலவில்லையானால் தீய பேச்சுக்கள் பேசுவதைவிட்டும் உமது நாவை கட்டுப்படுத்துவீராக” என்று கூறினார்கள்.
(பைஹகீ)
١٢– عَنْ اَسْوَدَ بْنِ اَصْرَمَؓ قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِ اَوْصِنِيْ، قَالَ: تَمْلِكُ يَدَكَ، قُلْتُ: فَمَاذَا اَمْلِكُ اِذَا لَمْ اَمْلِكْ يَدِيْ؟ قَالَ: تَمْلِكُ لِسَانَكَ، قُلْتُ: فَمَاذَا اَمْلِكُ اِذَا لَمْ اَمْلِكْ لِسَانِيْ؟ قَالَ: لاَ تَبْسُطْ يَدَكَ اِلاَّ اِلي خَيْرٍ وَلاَ تَقُلْ بِلِسَانِكَ اِلاَّ مَعْرُوْفًا.
رواه الطبراني واسناده حسن، مجمع الزوائد:١٠ /٥٣٨
12. ஹஜ்ரத் அஸ்வதுப்னு அஸ்ரம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், “யாரஸூலல்லாஹ், எனக்கு அறிவுரை கூறுங்கள்!” என்று கூறினேன், “உன்னுடைய கையை உன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பாயாக” (கைகளால் பிறருக்குத் தீங்கு விளைவிக்காதே) என்று சொன்னார்கள்.”என் கையே என் கட்டுப்பாட்டில் இல்லை எனில், வேறு எதுதான் என் கட்டுப்பாட்டில் இருக்க முடியும்?” (கையை என் கட்டுப்பாட்டில் வைக்கமுடியும்) என்று சொன்னேன். “உமது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், “எனது நாவு என் கட்டுப்பாட்டில் இல்லையெனில், வேறு எதுதான் என் கட்டுப்பாட்டில் இருக்க முடியும்?” என்றேன். “உமது கையை நன்மையான காரியங்களுக்கேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தாதீர், உன்னுடைய நாவால் நன்மையான சொல்லையே சொல்லும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٣–عَنْ اَسْلَمَؒ اَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِؓ اِطَّلَعَ عَلي اَبِيْ بَكْرٍ وَهُوَ يَمُدُّ لِسَانَهُ قَالَ: مَا تَصْنَعُ يَا خَلِيْفَةَ رَسُوْلِ اللهِ؟ قَالَ:اِنَّ هذَا الَّذِيْ اَوْرَدَ نِيَ الْمَوَارِدَ،اِنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لَيْسَ شَيْءٌ مِنَ الْجَسَدِ اِلاَّ يَشْكُوْ ذَرَبَ اللِّسَانِ عَلي حِدَّتِهِ.
رواه البيهقي:٤/٢٤٤
13. ஹஜ்ரத் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் தனது நாவை இழுத்துக் கொண்டிருப்பதை ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் பார்த்து, “அல்லாஹ்வின் ரஸூலுடைய கலீஃபாவே, தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று வினவினார்கள்.”இந்த நாவுதான் என்னை நாசமாக்கும் இடங்களுக்கு என்னைக் கூட்டிச் சென்றது” என்று சொல்லி விட்டு, “தீய வார்த்தையாலும், நாவின் கூர்மையாலும் ஏற்படும் நாவின் கெடுதியைப் பற்றி முறையிடாத எந்தப் பாகமும் உடலில் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
(பைஹகீ)
١٤– عَنْ حُذَيْفَةَؓ قَالَ: كُنْتُ رَجُلاً ذَرِبَ اللِّسَانِ عَلي اَهْلِيْ فَقُلْتُ:يَا رَسُوْلَ اللهِ قَدْ خَشِيْتُ اَنْ يُدْخِلَنِيْ لِسَانِيَ النَّارَ قَالَ: فَاَيْنَ اَنْتَ مِنَ اْلاِسْتِغْفَارِ؟ اِنِّيْ لَأَسْتَغْفِرُ اللهَ فِي الْيَوْمِ مِائَةً.
رواه احمد:٥ /٣٩٧
14. ஹஜ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “என்னுடைய நாவை என் வீட்டார்கள் மீது அதிகமாகப் பிரயோகித்து வந்தேன். (அவர்களை மிகவும் குறை கூறிக் கொண்டிருந்தேன்) நான் நபி (ஸல்) அவர்களிடம், “யாரஸூலல்லாஹ்! என் நாவு என்னை நரகத்தில் நுழைய வைத்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்” என்றேன், “அவ்வாறெனில், பிறகு இஸ்திஃபார் எங்கே போய்விட்டது?” (உமது நாவைச் சீராக்கக் கூடிய இஸ்திஃபாரை (பிழை பொறுக்கத் தேடுதலை) நீர் செய்வதில்லையா?) நானே ஒரு நாளைக்கு நூறு முறை இஸ்திஃபார் செய்து வருகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(முஸ்னத் அஹமத்)
١٥– عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَيْمَنُ امْرِئئٍ وَاَشْأَمُهُ مَا بَيْنَ لَحْيَيْهِ.
رواه الطبراني ورجاله رجال الصحيح، مجمع الزوائد:١٠ /٥٣٨
15. “மனிதனுடைய நற்பாக்கியமும், துர்ப்பாக்கியமும் அவனுடைய இரு தாடைகளுக்கிடையே உள்ளன (நாவை முறையாகப் பயன்படுத்துவது நற்பாக்கியத்துக்கும், அதனை முறை தவறிப் பயன்படுத்துவது, துர்ப்பாக்கியத்துக்கும் காரணமாகும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அதீயிப்னு ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
١٦– عَنِ الْحَسَنِؒ يَقُوْلُ: بَلَغَنَا اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: رَحِمَ اللهُ عَبْدًا تَكَلَّمَ فَغَنِمَ اَوْ سَكَتَ فَسَلِمَ.
رواه البيهقي في شعب الايمان:٤/٢٤١
16. “நல்ல பேச்சுக்களைப் பேசி இம்மை, மறுமையில் அதன் பலனை அடைகின்ற, அல்லது மௌனமாக இருந்து, நாவின் கெடுதிகளைவிட்டு தன்னைத் தற்காத்துக்கொள்ளும் அடியான் மீது அல்லாஹுதஆலா அருள் புரிவானாக!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் எங்களுக்குக் கிடைத்துள்ளது‘ என ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
١٧– عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ صَمَتَ نَجَا.
رواه الترمذي وقال: هذا حديث غريب، باب حديث من كان يؤمن بالله…، رقم:٢٥٠١
17. “மௌனமாக இருந்தவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
தெளிவுரை:- வீணான, தீய பேச்சுக்களைவிட்டும் தனது நாவைத் தடுத்துவிட்டவருக்கு, இம்மை, மறுமையின் ஏராளமான ஆபத்துகள், சிரமங்கள், குறைகளிலிருந்து ஈடேற்றம் கிடைத்துவிட்டது. ஏனேனில், பொதுவாக மனிதன் சிக்கிக் கொள்கின்ற ஆபத்துகளில் பெரும்பாலானவை நாவின் மூலம் தான் ஏற்படுகின்றன.
(மிர்காத்)
١٨– عَنْ عِمْرَانَ بْنِ حَطاَّنَؒ قَالَ: لَقِيْتُ اَبَا ذَرٍّؓ فَوَجَدْتُهُ فِي الْمَسْجِدِ مُخْتَبِئًا بِكَسَاءٍ اَسْوَدَ وَحْدَهُ فَقَالَ: يَا اَبَا ذَرٍّ مَا هذِهِ الْوَحْدَةُ؟ فَقَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اَلْوَحْدَةُ خَيْرٌ مِنْ جَلِيْسِ السُّوْءِ وَالْجَلِيْسُ الصَّالِحُ خَيْرٌ مِنَ الْوَحْدَةِ وَاِمْلاَءُ الْخَيْرِ خَيْرٌ مِنَ السُّكُوْتِ وَالسُّكُوْتُ خَيْرٌ مِنْ اِمْلاَءِ الشَّرِّ.
رواه البيهقي:٤ /٢٥٦
18. ஹஜ்ரத் இம்ரானிப்னுஹத்தான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்களைக் கறுப்பு நிறக் கம்பளியைத் தம் மீது போர்த்தியவர்களாகத் தன்னந்தனியாக பள்ளியில் உட்கார்ந்திருக்கக் கண்டேன். “அபூதர்! இப்படி தனியே அமர்ந்திருப்பதேன்?” என்று நான் வினவினேன், “கெட்ட நண்பனுடன் அமர்ந்திருப்பதைவிட தனிமை மேலானது, நல்ல நண்பனுடன் அமர்வது தனிமையைவிட மேலானது, யாருக்கேனும் நல்ல சொற்களைச் சொல்வது மௌனத்தைவிடச் சிறந்தது. தீய வார்த்தை கூறுவதைவிட மௌனமாக இருப்பது சிறந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் என்று பதிலளித்தார்கள்.
(பைஹகீ)
١٩– عَنْ اَبِيْ ذَرٍّؓ قَالَ: دَخَلْتُ عَلي رَسُوْلِ اللهِ ﷺ فَقُلْتُ: يَا رَسُوْلَ اللهِ ﷺ اَوْصِنِيْ، فَذَكَرَ الْحَدِيْثَ بِطُوْلِهِ اِلي اَنْ قَالَ: عَلَيْكَ بِطُوْلِ الصَّمْتِ فَاِنَّهُ مَطْرَدَةٌ لِّلشَّيْطَانِ وَعَوْنٌ لَكَ عَلي اَمْرِ دِيْنِكَ، قُلْتُ: زِدْنِيْ، قَالَ: اِيَّاكَ وَكَثْرَةَ الضِّحْكِ فَاِنَّهُ يُمِيْتُ الْقَلْبَ وَيَذْهَبُ بِنُوْرِ الْوَجْهِ.
(وهو بعض الحديث) رواه البيهقي:٤/٢٤٢
19. ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, “யாரஸூலல்லாஹ், எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று வினவினேன், ” மௌனத்தை அதிகமாகக் கடைப்பிடியுங்கள். (தேவையின்றி எதும் பேசவேண்டாம்) இது (மௌனம்) ஷைத்தானை விரட்டும், தீனுடைய காரியங்களில் உமக்கு உதவியாக இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் “இன்னும் உபதேசியுங்கள்” என்றார்கள். “அதிகமாகச் சிரிப்பதைத் தவிர்ந்து கொள்ளுங்கள், ஏனேனில், இப்பழக்கம் உள்ளத்தை மரணிக்கச் செய்து, முகத்தின் ஒளியைப் போக்கிவிடுகிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பைஹகீ)
٢٠– عَنْ اَنَسٍؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ لَقِيَ اَبَاذَرٍّ فَقَالَ: يَا اَبَاذَرٍّ! اَلاَ اَدُلُّكَ عَلي خَصْلَتَيْنِ هُمَا اَخَفُّ عَلي الظَّهْرِ وَاَثْقَلُ فِي الْمِيْزَانِ مِنْ غَيْرِهِمَا؟ قَالَ: بَلي يَا رَسُوْلَ اللهِ، قَالَ: عَلَيْكَ بِحُسْنِ الْخُلُقِ وَطُوْلِ الصَّمْتِ وَالَّذِيْ نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ مَا عَمِلَ الْخَلاَئِقُ بِمِثْلِهِمَا.
(الحديث) رواه البيهقي:٤/٢٤٢
20. ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்களைச் சந்தித்தார்கள், “அமல் செய்வதற்கு மிக எளிதானதும் நன்மைகளை எடைபோடும் தராசை, மற்ற செயல்களைவிட பாரமாக்கக் கூடியதுமான இரு பழக்கங்களை அபூதரே! உமக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். “யாரஸூலல்லாஹ், அவசியம் அறிவியுங்கள்‘ என ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள். “நற்குணத்தையும், அதிகம் மவுனமாக இருப்பதையும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முஹம்மது (ஸல்) அவர்களின் உயிர் எவன் வசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! எல்லாப் படைப்புகளின் செயல்களிலும், இவ்விரண்டு செயல்களைப் போன்ற நல்ல செயல் வேறில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பைஹகீ)
٢١– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍؓ قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِﷺ اَ كُلُّ مَا نَتَكَلَّمُ بِهِ يُكْتَبُ عَلَيْنَا؟ فَقَالَ: ثَكِلَتْكَ اُمُّكَ، وَهَلْ يَكُبُّ النَّاسَ عَلي مَنَاخِرِهِمْ فِي النَّارِ اِلاَّ حَصَائِدُ اَلْسِنَتِهِمْ، اِنَّكَ لَنْ تَزَالَ سَالِمًا مَا سَكَتَّ فَاِذَا تَكَلَّمْتَ كُتِبَ لَكَ اَوْ عَلَيْكَ.
قلت: رواه الترمذي باختصار من قوله: اِنَّكَ لَنْ تَزَالَ اِلَي آخره. روا الطبراني باسنادين ورجال احدهما ثقات، مجمع الزوائد:١٠/٥٣٨
21. ஹஜ்ரத் முஆதுப்னுஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “எந்தப் பேச்சை நாங்கள் பேசினாலும் அவையாவும் எங்களுடைய பட்டோலைகளில் எழுதப்படுமா? (அவற்றுக்காக தண்டிக்கப்படுவோமா?)’ என்று நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வினவினேன். “உமது தாய் உமக்காக அழட்டும், (நன்றாக அறிந்து கொள்ளும்) நாவின் தீய பேச்சுக்களே மக்களை முகங்குப்புற நரகத்தில் தள்ளக்கூடியது. நீங்கள் மௌனமாக இருக்கும்வரை (நாவின் ஆபத்திலிருந்து) பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்கள் பேசினால், ஒன்று உங்களுக்கு நன்மை, அல்லது பாவம் எழுதப்பட்டு விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸாயித்)
தெளிவுரை:- “உமது தாய் உமக்காக அழட்டும்” என்ற வார்த்தை அரபி மொழியில் நேசத்தை வெளிப்படுத்த உபயோகிக்கும் நேச வார்த்தை, இது சாப வார்த்தையல்ல.
٢٢– عَنْ عَبْدِ اللهِؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اَكْثَرُ خَطَايَا ابْنِ آدَمَ فِيْ لِسَانِهِ.
(وهو طرف من الحديث) رواه الطبراني ورجاله رجال الصحيح، مجمع الزوائد:١٠ /٥٣٨
22. “மனிதனின் தவறுகளில் மிகுதமானவை அவனுடைய நாவால் ஏற்படுகின்றன” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٣– عَنْ اَمَةِ ابْنَةِ اَبِي الْحَكَمِ الْغِفَارِيَّةِؓ قَالَتْ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ الرَّجُلَ لَيَدْنُوْ مِنَ الْجَنَّةِ حَتَّي مَا يَكُوْنُ بَيْنَهُ وَبَيْنَهَا قِيْدُ ذِرَاعٍ فَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ فَيَتَبَاعَدُ مِنْهَا اَبْعَدَ مِنْ صَنْعَاءَ.
رواه احمد ورجاله رجال الصحيح غير محمد بن اسحاق وقد وثق، مجمع الزوائد:١٠ /٥٣٣
23. “மனிதன் தனக்கும் சொர்க்கத்திற்கும் இடையில் ஒரு முழம் அளவு நெருங்கிவிடுகின்றான். பிறகு அவன் கூறும் சில வார்த்தைகளின் காரணமாக மதீனாவிலிருந்து ஸன்ஆஃவை (யமன் நாட்டின் நகரம்) விட அதிகமான தொலைதூரம் சொர்க்கத்தை விட்டும் தூரமாகிவிடுகிறான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபுல்ஹகமுடைய மகளின் அடிமைப் பெண் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
٢٤– عَنْ بِلاَلِ بْنِ الْحَارِثِ الْمُزَنِيِّؓ صَاحِبِ رَسُوْلِ اللهِ ﷺ يَقُوْلُ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ اَحَدَكُمْ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللهِ مَا يَظُنُّ اَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ فَيَكْتُبُ اللهُ لَهُ بِهَا رِضْوَانَهُ اِلي يَوْمِ يَلْقَاهُ، وَاِنَّ اَحَدَكُمْ لَيَتَكَلَّمُ باِلْكَلِمَةِ مِنْ سَخَطِ اللهِ مَا يَظُنُّ اَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ فَيَكْتُبُ اللهُ عَلَيْهِ بِهَا سَخَطَهُ اِلي يَوْمِ يَلْقَاهُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب ما جاء في قلة الكلام، رقم:٢٣١٩
24. “உங்களில் ஒருவர் அல்லாஹுதஆலாவை திருப்திப்படுத்துகின்ற ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறார். அவர் அதை மிகப் பெரிதாகக் கருதுவதில்லை. அந்த வார்த்தையின் காரணமாக அல்லாஹுதஆலா கியாமத் நாள் வரை அவரை திருப்தியுற முடிவெடுத்துவிடுகிறான். மேலும், உங்களில் ஒருவர் அல்லாஹுதஆலாவுக்கு வெறுப்பை உண்டாக்கும் ஒரு பேச்சைப் பேசிவிடுகிறார், அதை அவர் மிகப் பெரிதாக எண்ணுவதில்லை. அந்தப் பேச்சின் காரணமாக அல்லாஹுதஆலா கியாமத் நாள் வரை அவரை வெறுத்திட முடிவெடுத்துவிடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் பிலால்இப்னு ஹாரிஸ் முஸனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٥– عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّؓ يَرْفَعُهُ قَالَ: اِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ لاَ يُرِيْدُ بِهَا بَاْسًا اِلاَّ لِيُضْحِكَ بِهَا الْقَوْمَ فَاِنَّهُ لَيَقَعُ مِنْهَا اَبْعَدَ مِنَ السَّمَاءِ.
رواه احمد:٣ /٣٨
25. “ஒருவன் மக்களைச் சிரிக்கவைக்க வேண்டும் என்றே ஒரு வார்த்தையைப் பேசிவிடுகிறான், அதை ஒரு குற்றமாகவே கருதவில்லை. ஆயினும், அதன் காரணமாக அவன் வானம், பூமிக்கிடையே உள்ள தூரத்தைவிட அதிகமான ஆழத்திற்கு நரகத்தில் சென்றுவிடுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٢٦– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللهِ لاَ يُلْقِيْ لَهَا بَالاً يَرْفَعُ اللهُ بِهَا دَرَجَاتٍ، وَاِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللهِ لاَ يُلْقِيْ لَهَا بَالاً يَهْوِيْ بِهَا فِيْ جَهَنَّمَ.
رواه البخاري، باب حفظ اللسان، رقم:٦٤٧٨
26. “ஓர் அடியான் அல்லாஹுதஆலாவின் திருப்திக்குக் காரணமான ஒரு வார்த்தையைப் பேசிவிடுகிறான், அதை அவன் பெரிதாகக் கருதுவதில்லை. ஆனால், அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவருடைய பதவியை உயர்த்திவிடுகிறான். மேலும், ஓர் அடியான் அல்லாஹுதஆலாவின் அதிருப்திக்குரிய ஒரு சொல்லைச், சொல்லிவிடுகிறான், அதை அவன் பொருட்படுத்துவதும் இல்லை. ஆனால், இதன் காரணமாக நரகத்தில் விழுந்துவிடுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٢٧– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يَتَبَيَّنُ مَا فِيْهَا يَهْوِيْ بِهَا فِي النَّارِ اَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ.
رواه مسلم، باب حفظ اللسان، رقم:٧٤٨٢
27. “அடியான் சிந்திக்காமல், ஒரு சொல், சொல்லிவிடுகிறான். அதன் காரணமாக கிழக்கு மேற்குக்கு இடையே உள்ள தொலை தூரத்தைவிடவும் அதிக தூரம் நரகத்தில் போய் விழுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٢٨– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ:قَالَ رَسُوْلُ اللهِ ﷺ:اِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ لاَ يَرَي بِهَا بَأْسًا يَهْوِيْ بِهَا سَبْعِيْنَ خَرِيْفًا فِي النَّارِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ما جاء من تكلم بالكلمة…، رقم:٢٣١٤
28. “மனிதன் ஒரு வார்த்தையைப் பேசிவிடுகிறான், அதைச் சொல்வதில் எந்தக் குற்றமும் இல்லை என்று கருதுகிறான். ஆனால், அதன் காரணமாக எழுபது வருடத் தொலைதூரத்திற்குச் சமமான அளவு நரகத்தில் போய் விழுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٢٩– عَنْ عَمْرِو بْنِ الْعَاصِؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: لَقَدْ اُمِرْتُ اَنْ اَتَجَوَّزَ فِي الْقَوْلِ فَاِنَّ الْجَوَازَ هُوَ خَيْرٌ.
رواه ابو داؤد باب ما جاء في التشدق في الكلام، رقم: ٥٠٠٨
29. “எனக்கு சுருக்கமாகப் பேசக் கட்டளையிடப்பட்டுள்ளது, ஏனேனில் சுருங்கப் பேசுவதே சிறந்தது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٠– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ اْلآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْلِيَصْمُتْ.
(الحديث) رواه البخاري، باب حفظ اللسان، رقم:٦٤٧٥
30. “அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் எவர் ஈமான் கொண்டாரோ அவர் நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣١– عَنْ اُمِّ حَبِيْبَةَؓ زَوْجِ النَّبِيِّ ﷺ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: كَلاَمُ ابْنِ آدَمَ عَلَيْهِ لاَ لَهُ اِلاَّ اَمْرٌ بِمَعْرُوْفٍ، اَوْ نَهْيٌ عَنْ مُنْكَرٍ اَوْ ذِكْرُ اللهِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب منه حديث كل كلام ابن آدم عليه لا له، الجامع الصحيح لسنن الترمذي، رقم:٢٤١٢
31. “நல்லதை ஏவுவது அல்லது தீயதைத் தடுப்பது அல்லது அல்லாஹுதஆலாவை திக்ரு செய்வது ஆகியவற்றைத் தவிர மனிதனுடைய எல்லா பேச்சுக்களும் அவனுக்கு நஷ்டத்தைத் தரும்” (தண்டிக்கப்படுவதற்கு காரணமாகும்‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னாரின் துணைவியார் ஹஜ்ரத் உம்முஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٢– عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ تُكْثِرِ الْكَلاَمَ بِغَيْرِ ذِكْرِ اللهِ، فَاِنَّ كَثْرَةَ الْكَلاَمِ بِغَيْرِ ذِكْرِ اللهِ قَسْوَةٌ لِلْقَلْبِ، وَاِنَّ اَبْعَدَ النَّاسِ مِنَ اللهِ الْقَلْبُ الْقَاسِيْ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب منه النهي عن كثرة الكلام الا بذكر الله، رقم:٢٤١١
32. “அல்லாஹுதஆலாவை திக்ரு செய்வதைத் தவிர அதிகமாகப் பேசவேண்டாம் ஏனேனில், அதிகப் பேச்சு உள்ளத்தின் கடினத் தன்மையையும், உணர்வற்ற தன்மையையும் உண்டாக்குகிறது. மக்களில் அல்லாஹுதஆலாவுக்கு மிகவும் தூரமானவன் கடினமான உள்ளம் உடையவன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٣– عَنِ الْمُغِيْرَةِ بْنِ شُعْبَةَؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: اِنَّ اللهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا: قِيْلَ وَقَالَ وَاِضَاعَةَ الْمَالِ وَكَثْرَةَ السُّؤَالِ.
رواه البخاري، باب قول الله لا يسالون الناس الحافا، رقم:١٤٧٧
33. “உங்களிடம் மூன்று காரியங்களை அல்லாஹுதஆலா வெறுக்கிறான், (பயனற்ற) தேவையில்லாத பேச்சுக்களைப் பேசுவது, பொருளை வீண் விரயம் செய்வது, அதிகமாகக் கேள்விகள் கேட்பது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஙீரதுப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٣٤– عَنْ عَمَّارٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَ لَهُ وَجْهَانِ فِي الدُّنْيَا، كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ.
رواه ابوداؤد، باب في ذي الوجهين، رقم:٤٨٧٣
34. “உலகில் யார் இருமுகம் உடையவனாக இருப்பானோ (நயவஞ்சகனைப் போன்று பலதரப்பட்ட மனிதர்களிடம் பலவிதமாகப் பேசுகின்றவன்) கியாமத் நாளன்று அவனது வாயில் தீயாலான இரண்டு நாவுகள் இருக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்மார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٣٥– عَنْ مُعَاذٍؓ قَالَ: يَا رَسُوْلَ اللهِ مُرْنِيْ بِعَمَلٍ يُدْخِلُنِيَ الْجَنَّةَ قَالَ: آمِنْ بِاللهِ وَقُلْ خَيْرًا، يُكْتَبُ لَكَ وَلاَ تَقُلْ شَرًّا فَيُكْتَبُ عَلَيْكَ.
رواه الطبراني في الاوسط، مجمع الزوائد:١٠ /٥٣٩
35. யாரஸூலல்லாஹ், சொர்க்கத்தில் நுழையவைக்கும் ஓர் அமலை எனக்குச் சொல்லித்தாருங்கள் என்று நான் கேட்டேன், “அல்லாஹுதஆலாவின் மீது ஈமான் கொள்வீராக! நல்ல வார்த்தைகளையே பேசுவீராக! உமக்கு நன்மை எழுதப்படும். தீய வார்த்தைகளைப் பேசாதீர் (அவ்வாறு பேசிவிட்டால்) உமக்குத் தீமை எழுதப்படும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
٣٦– عَنْ مُعَاوِيَةَ بْنِ حَيْدَةَؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: وَيْلٌ لِلَّذِيْ يُحَدِّثُ بِالْحَدِيْثِ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ فَيَكْذِبُ،وَيَلٌ لَهُ وَيْلٌ لَهُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن، باب ما جاء من تكلم بالكلمة ليضحك الناس، رقم:٢٣١٥
36. “மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்கு நாசம் தான் உண்டாகும், அவனுக்கு நாசம் தான்! அவனுக்கு நாசம் தான்!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஆவியத்துப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٧– عَنِ ابْنِ عُمَرَؓ عَنِ النَّبيِّ ﷺ قَالَ: اِذَا كَذَبَ الْعَبْدُ تَبَاعَدَ عَنْهُ الْمَلَكُ مِيْلاً مِنْ نَتْنِ مَا جَاءَ بِهِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن جيد غريب، باب ما جاء في الصدق والكذب، رقم:١٩٧٢
37. “ஓர் அடியான் பொய் சொன்னால் அவனுடைய பொய்யின் துர்வாடையினால் மலக்கு ஒரு மைல் தூரம் அவனை விட்டும் தூரமாகிவிடுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
٣٨– عَنْ سُفْيَانَ بْنِ اَسِيْدِ نِ الْحَضْرَمِيِّؓ قَالَ:سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ:كَبُرَتْ خِيَانَةً اَنْ تُحَدِّثَ اَخَاكَ حَدِيْثًا هُوَ لَكَ بِهِ مُصَدِّقٌ وَاَنْتَ لَهُ بِهِ كَاذِبٌ.
رواه ابو داؤد، باب في المعاريض، رقم:٤٩٧١
38. “நீங்கள் உங்கள் சகோதரனிடம் ஏதேனுமொரு பொய்யான செய்தியைச் சொல்ல, அதை அவர் உண்மை என்று நம்புகிறார், இது மிகப்பெரும் மோசடியாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸுஃப்யானிப்னு அஸீத் ஹள்ரமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- பொய் சொல்வது பெரும்பாவம், சில சமயங்களில் இன்னும் அதனுடைய கடுமை அதிகரித்துவிடுகிறது. ஒருவர் உங்களை முழுமையாக நம்ப, நீங்கள் அவருடைய நம்பிக்கையை தவறான முறையில் பயன்படுத்தி பலன் பெறப் பொய் சொல்லி, அவரை ஏமாற்றுவது அவற்றில் ஒருவகை.
٣٩– عَنْ اَبِيْ اُمَامَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يُطْبَعُ الْمُؤْمِنُ عَلَي الْخِلاَلِ كُلِّهَا اِلاَّ الْخِيَانَةَ وَالْكَذِبَ.
رواه احمد:٥/٢٥٢
39. “இயற்கையிலேயே ஒரு முஃமினிடம் (நல்ல, தீய) எல்லாத் தன்மைகளும் இருக்க முடியும், ஆயினும், பொய் சொல்லும் தன்மையும் மோசடி செய்யும் தன்மையும் ஒரு முஃமினிடம் இருக்க முடியாது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
٤٠– عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍؒ اَنَّهُ قَالَ: قِيْلَ لِرَسُوْلِ اللهِ ﷺ: اَيَكُوْنُ الْمُؤْمِنُ جَبَانًا؟ فَقَالَ: نَعَمْ، فَقِيْلَ لَهُ: اَيَكُوْنُ الْمُؤْمِنُ بَخِيْلاً؟ فَقَالَ: نَعَمْ، فَقِيْلَ لَهُ: اَ يَكُوْنُ الْمُؤْمِنُ كَذَّابًا؟ قَالَ: لاَ.
رواه الامام مالك في الموطا، ما جاء في الصدق والكذب. ص:٧٣٢
40. ஹஜ்ரத் ஸஃப்வானிப்னு ஸுலைம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முஃமின் கோழையாக இருக்க முடியுமா?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, “இருக்க முடியும்” என்று கூறினார்கள்.”முஃமின் உலோபியாக இருக்கமுடியுமா?” என்று மீண்டும் கேட்கப்பட்டது “இருக்க முடியும்” என்று பதில் சொன்னார்கள். “ஒரு முஃமின் பொய்யனாக இருக்க முடியுமா?” என்று கேட்கப்பட்டது, “பொய்யனாக இருக்க முடியாது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(முஅத்தா)
٤١– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: تَقَبَّلُوْا لِيْ سِتًّا، اَتَقَبَّلُ لَكُمْ بِالْجَنَّةِ قَالُوْا: مَا هِيَ؟ قَالَ: اِذَا حَدَّثَ اَحَدُكُمْ فَلاَ يَكْذِبْ، وَاِذَا وَعَدَ فَلاَ يُخْلِفْ، وَاِذَا ائْتُمِنَ فَلاَ يَخُنْ، وَغُضُّوْا اَبْصَارَكُمْ وَكُفُّوْا اَيْدِيَكُمْ، وَاحْفَظُوْا فُرُوْجَكُمْ.
رواه ابو يعلي ورجاله رجال الصحيح الا ان يزيد بن سنان لم يسمع من انس، وفي الحاشية: رواه ابو يعلي وفيه سعيد او سعد بن سنان وليس فيه يزيد بن سنان وهو حسن الحديث، مجمع الزوائد: ١٠/٥٤١
41. “எனக்காக ஆறு காரியங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால், நீங்கள் சொர்க்கம் செல்ல நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “அவை யாவை”? என ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர். “1. உங்களில் ஒருவர் பேசினால் பொய் சொல்ல வேண்டாம், 2. வாக்குறுதி கொடுத்தால் வாக்குறுதியை மீற வேண்டாம், 3. ஒருவரிடம் அமானிதம் வைக்கப்பட்டால் அதில் அவர் மோசடி செய்ய வேண்டாம், 4. உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் (பார்க்கத்தகாதவற்றின் மேல் பார்வை செலுத்தக்கூடாது), 5. உங்களது கரங்களை (அநியாயமாகப் பிறரை அடிப்பது போன்றவைகளை விட்டு)த் தடுத்து வையுங்கள், 6. உங்களது மர்மஸ்தானத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்”.
(அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)
٤٢– عَنْ عَبْدِ اللهِؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ الصِّدْقَ يَهْدِيْ اِلَي الْبِرِّ، وَاِنَّ الْبِرَّ يَهْدِيْ اِلَي الْجَنَّةِ، وَاِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّي يُكْتَبَ عِنْدَ اللهِ صِدِّيْقًا، وَاِنَّ الْكَذِبَ يَهْدِيْ اِلَي الْفُجُوْرِ، وَاِنَّ الْفُجُوْرَ يَهْدِيْ اِلَي النَّارِ، وَاِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّي يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا.
رواه مسلم باب قبح الكذب ….،رقم:٦٦٣٧
42. “சந்தேகமின்றி, உண்மை சொல்வது நன்மையின் பால் வழிநடத்துகிறது, நன்மை சொர்க்கம் வரை சேர்த்துவிடுகிறது. மனிதன் உண்மை சொல்லிக்கொண்டே இருக்கிறான். இறுதியில், அவன் பெயர் அல்லாஹுதஆலாவிடம் ஸித்தீக் (மிக உண்மையாளர்) உடைய பட்டியலில் எழுதப்படுகிறது. சந்தேகமின்றி, பொய்சொல்வது தீமையின்பால் கொண்டு செல்கிறது. தீமை அவனை நரகம் வரை சேர்த்துவிடுகிறது. மனிதன் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறான். இறுதியில் அல்லாஹுதஆலாவிடம் அவன் பெயர் “கத்தாப்” (அதிகம் பொய் சொல்பவன்) உடைய பட்டியலில் எழுதப்படுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٤٣– عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: كَفَي بِالْمَرْءِ كَذِبًا اَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ.
رواه مسلم، باب النهي عن الحديث بكل ما سمع، رقم: ٧
43. “ஒருவன் தான் கேட்ட செய்திகள் அனைத்தையும் (தீர விசாரிக்காமல்) பிறருக்குச் சொல்வது ஒன்றே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹஃப்ஸுப்னு ஆஸிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- கேட்டவற்றையெல்லாம் தீர விசாரிக்காமல் பிறரிடம் சொல்வது பொய்யின் ஒருவகையாகும். இதன் காரணமாக மக்களுக்கு அவன் மீதுள்ள நம்பிக்கை நீங்கிவிடுகிறது.
٤٤– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: كَفَي بِالْمَرْئءِ اِثْمًا اَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ.
رواه ابو داؤد، باب التشديد في الكذب، رقم:٤٩٩٢
44. “ஒருவன் தான் கேட்டவற்றையெல்லாம் (தீர விசாரிக்காமல்) பிறரிடம் சொல்லிவிடுவதே அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
٤٥– عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ اَبِيْ بَكْرَةَؓ قَالَ: اَثْنَي رَجُلٌ عَلي رَجُلٍ عِنْدَ النَّبِيِّ ﷺ فَقَالَ: وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ اَخِيْكَ – ثَلاَثًا– مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا لاَ مَحَالَةَ فَلْيَقُلْ: اَحْسِبُ فُلاَنًا وَاللهُ حَسِيْبُهُ، وَلاَ اُزَكِّيْ عَلَي اللهِ اَحَدًا، اِنْ كَانَ يَعْلَمُ.
رواه البخاري، باب ما جاء في قول الرجل ويلك، رقم:٦١٦٢
45. ஹஜ்ரத் அப்துர்ரஹ்மானிப்னு அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு முன் ஒரு மனிதர் இன் னோருவரைப் புகழ்ந்து கூறினார். (யாரைப் புகழ்ந்தாரோ அவரும் அங்கிருந்தார்) “உன் மீது பரிதாபப்படுகிறேன்! நீர் உமது சகோதரரின் கழுத்தை முறித்துவிட்டீர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். “உங்களில் யாரையேனும் புகழ்வதை அவசியமெனக் கருதினால், அந்த மனிதர் நல்ல மனிதர் என்ற உறுதியும் இவருக்கு இருந்தால், “இன்னாரை நான் நல்லவரெனக் கருதுகிறேன். அல்லாஹுதஆலாதான் அவரிடம் கேள்வி கணக்கு கேட்பவன். (அவர் நல்லவரா? தீயவரா? என்பதை உண்மையில் அவனே அறிபவன்) என்றும், நானோ அல்லாஹுதஆலாவுக்கு முன் யாரைப்பற்றியும் உறுதியாகப் புகழமாட்டேன்” என்றும் கூறட்டும்” என்று சொன்னார்கள்.
(புகாரி)
٤٦– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: كُلُّ اُمَّتِيْ مُعَافًي اِلاَّ الْمُجَاهِرِيْنَ، وَاِنَّ مِنَ الْمُجَاهَرَةِ اَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلاً، ثُمَّ يُصْبِحُ وَقَدْ سَتَرَهُ اللهُ فَيَقُوْلُ: يَا فُلاَنُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا، وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللهِ عَنْهُ.
رواه البخاري، باب ستر المؤمن علي نفسه. رقم:٦٠٦٩
46. “பகிரங்கமாகப் பாவம் செய்தவர்களைத் தவிர என் உம்மத்தினர் யாவரும் மன்னிக்கப்படக் கூடியவர்களே. ஒருவன் இரவில் பாவம் செய்தான். அல்லாஹுதஆலா அவனது பாவத்தை மறைத்து (அதை மக்களுக்குத் தெரியாதபடி) வைத்திருந்தும், மறுநாள் காலையில், “நண்பா! நான் நேற்றிரவு இன்னின்ன (பாவமான) காரியங்கள் செய்தேன்” என்று பகிரங்கப் படுத்தினான். மறைக்கப்பட்ட பாவச் செயலை பகிரங்கப் படுத்துவதும் பகிரங்கமாகப் பாவம் செய்ததைச் சாரும். அவனுடைய இறைவன் அவன் செய்த தவற்றை மறைத்த நிலையில் அவன் இரவைக் கழித்தான். (இரவில்) இவனுடைய பாவத்தின் மீது அல்லாஹுதஆலா போட்டிருந்த அந்தத் திரையை இவன் காலையில் அகற்றிவிட்டான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
٤٧– عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اِذَا قَالَ الرَّجُلُ: هَلَكَ النَّاسُ فَهُوَ اَهْلَكُهُمْ.
رواه مسلم، باب النهي عن قول هلك الناس، رقم: ٦٦٨٣
47. “மக்கள் நாசமடைந்து விட்டனர்” என்று எவன் கூறுவானோ மக்கள் அனைவரையும்விட அதிகமாக அவன் தான் நாசமடைந்து போவான்”. (ஏனேனில், இவ்வாறு சொல்பவன் மற்றவர்களை இழிவாகக் கருதியதால் தற்பெருமை என்னும் பாவத்தில் பீடிக்கப்பட்டுள்ளான்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
٤٨– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: تُوُفِّيَ الرَّجُلُ مِنْ اَصْحَابِهِ فَقَالَ يَعْنِيْ رَجُلاً:اَبْشِرْ بِالْجَنَّةِ، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَوَ لاَ تَدْرِيْ، فَلَعَلَّهُ تَكَلَّمَ فِيْمَا لاَ يَعْنِيْهِ اَوْ بَخِلَ بِمَا لاَ يَنْقُصُهُ.
رواه الترمذي وقال: هذا حسن غريب، باب حديث من حسن اسلام المرء….رقم:٢٣١٦
48. ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு ஸஹாபி இறந்துவிட்டார். ஒரு மனிதர் (மரணித்தவரைப் பார்த்து) “உமக்கு சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுகிறேன்” என்று சொன்னார். “உண்மை நிலவரம் தெரியாமல் எப்படி இவ்வாறு சொல்கிறீர்? இந்த மனிதர் ஏதேனும் வீணான வார்த்தை பேசியிருக்கலாம் அல்லது கொடுத்தாலும் குறைந்துவிடாத பொருளில் உலோபித்தனம் செய்திருக்கலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (உதாரணமாக இல்மைக் கற்பித்தல் அல்லது இரவலாக வீட்டுப் பொருள்களைக் கொடுத்து உதவுதல், அல்லது அல்லாஹுதஆலாவின் திருப்பொருத்தத்தில் பொருளைச் செலவிடுதல் போன்றவை. இவை இல்மையும், பொருளையும் குறைத்துவிடுவதில்லை).
(திர்மிதீ)
தெளிவுரை:- யாரைப் பற்றியும் இவர் சுவனவாசி என்று துணிந்து கூறிவிடக் கூடாது. அதே சமயம் அவரது நற் செயல்களின் காரணமாக சுவர்க்கத்தை ஆதரவு வைக்கவேண்டும் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.
٤٩– عَنْ حَسَّانِ بْنِ عَطِيَّةَؒ قَالَ: كَانَ شَدَّادُ بْنُ اَوْسٍؓ فِيْ سَفَرٍ فَنَزَلَ مَنْزِلاً فَقَالَ لِغُلاَمِهِ: اِئْتِنَا بِالسُّفْرَةِ نَعْبَثْ بِهَا، فَاَنْكَرْتُ عَلَيْهِ، فَقَالَ: مَا تَكَلَّمْتُ بِكَلِمَةٍ مُنْذُ اَسْلَمْتُ اِلاَّ وَاَنَا اَخْطِمُهَا وَاَزِمُّهَا غَيْرَ كَلِمَتِيْ هذِهِ فَلاَ تَحْفَظُوْهَا عَلَيَّ وَاحْفَظُوْا مِنِّي مَا اَقُوْلُ لَكُمْ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِذَا كَنَزَ النَّاسُ الذَّهَبَ وَالْفِضَّةَ فَاكْنِزُوْا هؤُلاَءِ الْكَلِمَاتِ، اَللّهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ الثَّبَاتَ فِي اْلاَمْرِ، وَالْعَزِيْمَةَ عَلَي الرُّشْدِ، وَاَسْئَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَاَسْئَلُكَ حُسْنَ عِبَادَتِكَ، وَاَسْئَلُكَ قَلْبًا سَلِيْمًا، وَاَسْئَلُكَ لِسَانًا صَادِقًا، وَاَسْئَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَاَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ اِنَّكَ اَنْتَ عَلاَّمُ الْغُيُوْبِ.
رواه احمد
49. ஹஜ்ரத் ஹஸ்ஸானிப்னு அதிய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது ஓர் இடத்தில் தங்கினார்கள். தமது அடிமையிடம், “உணவு உண்ணும் விரிப்பைக் கொண்டுவாரும். நாமும் சிறிது பொழுதைப் போக்குவோம்” என்று சொன்னார்கள். (ஹஜ்ரத் ஹஸ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்) அவரது இந்தப் பேச்சு எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. பிறகு அவர்கள் சொன்னதாவது: “நான் இஸ்லாத்தை தழுவியதிலிருந்து எந்தவொரு வார்த்தை பேசினாலும் எப்பொழுதும் யோசித்துத் தான் பேசுவேன். (ஆனால் இன்று மறதி ஏற்பட்டுவிட்டது) அதை நீங்கள் மறந்துவிடுங்கள். இனி நான் கூறுகின்றவற்றை ஞாபகம் வையுங்கள். நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். “மக்கள் தங்கத்தையும், வெள்ளியையும் கருவூலமாக்கிக் கொள்ளும்போது நீங்கள் இந்த வாக்கியங்களைக் கருவூலமாக்கிக் கொள்ளுங்கள்” (اَللّهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ الثَّبَاتَ فِي اْلاَمْرِ، وَالْعَزِيْمَةَ عَلَي الرُّشْدِ، وَاَسْئَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَاَسْئَلُكَ حُسْنَ عِبَادَتِكَ، وَاَسْئَلُكَ قَلْبًا سَلِيْمًا، وَاَسْئَلُكَ لِسَانًا صَادِقًا، وَاَسْئَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَاَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ اِنَّكَ اَنْتَ عَلاَّمُ الْغُيُوْبِ) “யாஅல்லாஹ்! நான் உன்னிடம் எல்லா காரியங்களிலும் நிலைத்து நிற்பதையும், நேர்வழியின் மீது உறுதியையும் வேண்டுகிறேன். மேலும் நீ கொடுத்த பாக்கியங்களுக்கு நன்றி செலுத்தும் சந்தர்ப்பத்தை வேண்டுகிறேன். உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் சந்தர்ப்பத்தை வேண்டுகிறேன். (ஷிர்க், குப்ரிலிருந்து) பரிசுத்தமான உள்ளத்தை உன்னிடம் வேண்டுகிறேன். உன்னிடம் உண்மை பேசும் நாவை வேண்டுகிறேன். நீ அறிந்த எல்லா நலவையும் உன்னிடம் வேண்டுகிறேன். நீ அறிந்த எல்லாத் தீங்குகளைவிட்டும் பாதுகாப்பு வேண்டுகிறேன். நீ என்னுடைய பாவங்களில் எத்தனை பாவங்களை நீ அறிந்திருக்கிறாயோ அத்தனை பாவங்களையும் மன்னிக்க வேண்டுகிறேன். நிச்சயமாக நீயே மறைவான அனைத்துக் காரியங்களையும் மிக அறிந்தவன்”.
(முஸ்னத்அஹ்மத்)